இன்று தொடக்கம் மின் சாரக்கட்டணத்தை 21.9 சதவீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த கட்டணத் திருத்தம் போதுமானது இல்லை என இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் நூற்றுக்கு 3.34 சதவீதத்தாலும் பின்னர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பித்த மின்கட்டண திருத்த யோசனையின் பிரகாரம் நூற்றுக்கு 14 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவினங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இன்று தொடக்கம் சகல மின்நுகர்வு கட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வீட்டு பாவனையில் 30 அலகுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மின்னலகுக்கான கட்டணம் நூற்றுக்கு 33 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 31 முதல் 60 அலகுகளுக்கான மின்கட்டணம் 28 சதவீதத்தால் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.
61-90 வரையான அலகுக்கான கட்டணம் 30 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 90 அலகுக்கு மேற்பட்டதும் 180 இற்கும் குறைந்ததுமான மின்னலகுக்கான கட்டணம் 24 சதவீதத்தாலும் 180 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத தலங்களுக்கான மின்கட்டணம் 33 சதவீதத்தாலும் பொது பாவனைகளுக்கான மின்கட்டணம் 23 சதவீதத்தாலும், அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 22 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணம் 18 சதவீதத்தாலும், வீதி மின்விளக்குகளுக்கான கட்டணம் 20 சதவீததத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண திருத்தத்துக்கு அமைய 30 அலகுகளுக்கு குறைவான மின்னலகை பாவிக்கும் நுகர்வோருக்கான மாதாந்த மின்கட்டணம் 180 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.