மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடனடியாக அமைத்துத் தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் நேற்று வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பகுதியில் வாகனங்கள் வேகமாக பயணிப்பதாகவும் இதனால் வீதி விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
அதுமட்டுமல்லாது கடந்த 04ஆம் திகதி குறித்த வீதியில் இடம் பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் மோதி அருட்தந்தை ஒருவர் உயிரிழந்ததாகவும் இதன்போது மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர், பொலிஸார் பொது மக்களுடன் கலந்து பேசிய நிலையில் விரைவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்த நிலையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.