கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சீன அரசின் உதவியுடன் 2,000 வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” சீன அரசின் உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். அத்துடன் மாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு உரிமத்தை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகும் கொள்கையின் கீழ் கொழும்பு ஹில்டன் ஹோட்டலை தனியார் துறை முதலீட்டிற்காக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஏற்கனவே நான்கு வர்த்தகர்கள் அதற்காக முன் வந்துள்ளனர். ஆனால் அரசாங்கம் எதிர்பார்க்கும் முதலீடு நிச்சயமாக அங்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
எமது அமைச்சின் கீழ் உள்ள ஹயாத் ஹோட்டலின் 50 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன. அதற்கான முதலீட்டாளரையும் தேடுகிறோம். டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையின் தாமரை கோபுரத்திலிருந்து லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான இரு பக்கங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பேர வாவிகளை சுத்தப்படுத்துவதற்கு ஜப்பானிய அரசாங்கத்துடனான திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் இத்திட்டம் ஆரம்பிக்கவுள்ளோம்” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.