மட்டக்களப்பில் ஆற்றில் குளிக்க சென்ற இருவர் மதுபோதையில் அருகிலிருந்த சேற்றுக் குழியில் மூழ்கி உயிரிழந்துள்தாக சந்திவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 33 வயதுடைய கூலித் தொழிலாளி ஒருவரும், உழவு இயந்திர சாரதியான 24 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவருமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தர்கள் இருவரும் சிவராத்திரி புஜைக்கு கோவிலுக்குச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு, நண்பரகளுடன் மட்டக்களப்பு சந்தனமடு ஆற்றில் குளித்துவிட்டு கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு பகலுணவு செய்வதற்கு தாமதம் ஏற்பட்டதனால், மதுபானம் அருந்திய குறித்த குடும்பஸ்தர்கள் இருவரும் மீண்டும் ஆற்றில் குளிக்கச்சென்ற வேளை சேற்றுக் குழியில் மூழ்கி இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சேற்றில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில்; ஈடுபட்ட பொதுமக்கள், அவர்களைசடலமாக மீட்டுள்ளனர்.
இருவரினதும் சடலங்கள் சந்திவெளி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.