”ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனித்துவிடப்பட்டுவிடுவார்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளருமான அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பண்டாரகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சக்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தொழிற்துறையை இல்லாமல் செய்துள்ளார். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வாழ முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளார்.
மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலைமைக்கு மக்களை அவர் தள்ளியுள்ளார். சிறிய பிள்ளைகள் முதற்கொண்டு பெற்றோர்வரை அனைவரையும் பட்டினியால் வைத்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் ரணிலுடன் யாரும் இருக்க மாட்டார்கள். அவருடன் யார் உள்ளார்கள்? குடு லன்சாவும், நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்கவும்தான் உள்ளார்கள்.
அப்படியான குழுவினர்தான் ரணிலுடன் உள்ளார்கள். இவர்களால் ரணிலை வெல்ல வைக்க முடியுமா? நாம் ஒருபோதும் ரணிலுடன் இணைய மாட்டோம். அவருடன் இணைவதால் எமக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது? ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் எல்லாம் ரணிலுடன் இல்லை.
இந்த நாட்டின் எதிர்க்காலத்திற்காகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி தேவைப்படுகிறது. அடுத்த 5 மாதங்களில் எமது வெற்றி உறுதி செய்யப்படும்” இவ்வாறு அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.