குறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டிய மாநகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எங்கள் முன்னிலையில் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன.
குறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.
நான் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது, நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை.
இன்று நாம் வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளோம். இதற்கு குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று பலர் நினைத்தார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர்.
அவர்களுடனும் உத்தியோகபூர்வ கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி மே அல்லது ஜூன்
மாதத்தில் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்பாரக்கிறோம். அதன் பிறகு, வங்குரோத்தற்ற நாடாக, சலுகைகளைப் பெற முடியும்.
எங்களிடம் குறுகிய அரசியல் நோக்கமில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிடமும் திட்டம் இல்லை.
எனவே, எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து உறுப்பினர்களுக்கும் எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
இந்த நாட்டை கடனில் இருந்து காப்பாற்றுவோம். அதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.