பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.09 செப்டம்பர் 5 ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தயாரிக்கப்பட்டுள்ள பால்நிலை சமத்துவம் தொடர்பான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தோடு, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது” இவ்வாறு பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.