வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தெடர்ந்து வழிபாடுகளைத் தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது செய்து தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.