ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு – லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
நாற்பது சிவில் அமைப்புகள் இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அன்றைய தினம் இந்த புதிய கூட்டணியுடன் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, புதிய கூட்டணியின் கொள்கைகளுக்கு பிரதான கட்சியொன்று இணங்கும் பட்சத்தில், குறித்த கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாத நிலையில், தேசியத் தேர்தலில் மனிதநேய மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கட்சிகளுக்குள் ஏற்கனவே உட்கட்சி பூசல் காணப்படும் நிலையில், இந்த புதிய கூட்டணியில் பலர் இணைவதற்கான சாத்தியம் உள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.