இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த 19 ஆம் திகதி முதல் வடக்கு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு மீனவர்களுக்கும் ஆதரவு தெரிவித்து, இன்று காலை, குறித்த பகுதிக்கு வருகைத் தந்திருந்த மீனவர்கள் இந்தியத் துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்ற மீனவர்கள், தூதரகத்திற்குள் நுழைவதற்கு முற்பட்டமையால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய துணைத் தூதரகத்துக்குள் சில மீனவர்கள் அழைக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அத்தோடு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மீனவர்களுடன் கலந்துரையாடியதையடுத்து, உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.