தண்டனைச் சட்டக் கோவையின் 19 ஆவது அத்தியாயத்தை திருத்துவதற்கு கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரான சுதர்ஷினி பர்னாந்துபுல்லே தெரிவித்துள்ளதாவது”
தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும் அது கற்பழிப்பாகவே கருதப்படும்.
இந்த நிலையில், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக்கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் ஊடாக அந்த வயது எல்லை 14 வயது வரை குறைக்கப்படவுள்ளது. இது கவலை அளிக்கின்றது.
அத்தோடு, குறித்த பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறவேண்டும். நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் நாட்டில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நீதியை உறுதிப்படுத்த வேண்டும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.