சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி தொடர்பான தெரிவுக்குழு முன்வைத்த பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் சம்பள அதிகரிப்பினை பிற்போடுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர்கள் உட்பட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் அண்மையில் கட்சித் தலைவர் கூட்டத்துக்கும், அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவிலும் முன்னிலையாகியிருந்தனர்.
மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தார். அரசாங்க நிதி தொடர்பான குழு மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கு இடையேயான கடிதப் பறிமாற்றத்தின் அடிப்படையில், ஊதியக் குழுவை நிறுவுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநரின் இணக்கப்பாட்டுடன் நிதி அமைச்சர் சர்ச்சைக்குரிய சம்பள அதிகரிப்பு குறித்து முழுமையான பரிசீலனைகளை மேற்கொண்டு நான்கு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்பு பணியாளர்களின் நிபுணத்துவம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தொடர்புடைய வகையிலான ஒப்பீடு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அனைத்து ஊழியர் பிரிவுகளுக்கும் ஊதியத்தில் நியாயமான மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் அரசாங்க நிதி பற்றிய குழு பற்றிய தெரிவுக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை முழுமையாக ஏற்பதாகவும், சம்பள அதிகரிப்பு செயற்படுத்தலை ஒத்திவைப்பதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.