”தேர்தல் பத்திர ஊழலில் இருந்து திசை திருப்பவே அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்துள்ளனர் என கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினால் 3 ஆவது முறையாக நேற்றைய தினம் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது இந்தியா இதுவரை பாராத அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஊழலாக தேர்தல் பத்திரங்களில் செய்த ஊழல் பார்க்கப்படுவதாகவும், அதனால், மத்தியில் ஆளும் அரசு இந்த விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்ப டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது எனவும், அது ஓர் ஊழல் கருவியாக செயல்படும் எனவும், இந்த விவகாரம் குறித்து தாம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.