விவசாய அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது விவசாயிகள் எவருக்கும் இது தொடர்பில் அறிவிக்காத நிலையில் அதில் தவறு இடம்பெற்றுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் விவசாய அமைச்சருடன் மீண்டும் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
விவசாய அமைச்சர் கிளிநொச்சி வந்து சென்று, தமக்கு தெரியாது என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இன்றைய கூட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் அழிவுக்கான நட்டயீடு வழங்கப்படாமை தொடர்பில் ஆராயப்பட்டது.
விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்பதால் நட்டயீட்டிற்கான காப்புறுதி தொகையை வழங்க முடியாது உள்ளதாக விவசாய காப்புறுதி நிறுவன பிரதிநிதி தெரிவித்திருந்த நிலையில் இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் தொடர்ந்து கருத்து வெளியிட்டிருந்தார்.
இதன்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மூன்றாம் நிலையை மதிப்பீடாக கருதி விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் வகையில் தீர்மானமாக எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வெள்ள அழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சட்ட ரீதியாக மூன்றாம் நிலையை விவசாய இழப்பீட்டு காலமாக கருத்தில் எடுத்து நட்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.