இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, இன்று அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, வேனில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பத்தினர், இணுவில் பகுதியில் அமைந்திருந்த குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயிலிலுடன் மோதுண்டனர்.
குறித்த விபத்தில் இளம் குடும்பத் தலைவரும் சில மாதங்களேயான பச்சிளம் குழந்தையும் ஸ்தலத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். குழந்தையின் தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ் விபத்தினையடுத்து, பிரதேச மக்களினால் புகையிரத கடவையில் எதிர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே திணைக்களத்தினால் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, சம்பிரதாயபூர்வமாக அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.