நிக்கவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ மற்றும் ஆனமடுவ ஆகிய அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 2022 ஆம் ஆண்டுக்கான 30 இலட்சம் கிலோ அரிசி காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன நெல் கையிருப்பின் பெறுமதி ஒரு பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையில் கையிருப்பு காணாமல் போனது தொடர்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி 4 களஞ்சியசாலைகளில் சுமார் ஆயிரம் கோடி பெறுமதியான நெல் இழப்பு ஏற்பட்டமை தொடர்பில் 4 களஞ்சியசாலைகளில் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு ஆரம்பகட்ட அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த சனிக்கிழமை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நெல் விற்பனைச் சபை நெல் கொள்வனவுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும், 11ஆம் திகதிக்குள் விவசாயிகளுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் வழங்கப்படும் எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட குறிப்பிட்டார்.