ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நாளிலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நேரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததன் பின்னர், வேட்புமனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிடுவார்.
அதன்படி ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் முதல் வாரத்திலோ அல்லது ஒக்டோபர் முதல் வாரத்திலோ நடத்தப்படலாம் எனவும் பிரச்சாரத்திற்கு 28 அல்லது 35 நாட்கள் அவகாசம் இருக்கும் எனவும் அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுவை அழைக்கும் திகதி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. இதனிடையே இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை உள்ளிட முடியாதவர்களுக்கு இவ்வருடம் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும், கிராம சேவையாளர் அலுவலகத்திலோ அல்லது தேர்தல் காரியாலயத்திலோ பெயர்களை உள்ளிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.