வவுனியாவில் 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான கலப்பின சோள விதைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய கலப்பின சோளன் உற்பத்தியானது பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம், மணியர்குளம், எருக்கலம்கல், வேலங்குளம், பாவற்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டது.
சோளன் செய்கையில் ஈடுபட்டவர்கள் கலப்பின சோழன் விதைகளை பதப்படுத்தி அதனை நெளுக்குளம் பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சோளன் விதை உற்பத்தி களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள போதும் குறித்த சோளன் விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சோளன் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகள் பலரும் பெரும் நட்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுபோக பயிற் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், ஏற்கனவே சோளன் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகள் தவிர ஏனைய விவசாயிகளுக்கு சோளப் பயிற் செய்கை மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளையும், ஆலோசனைகளையும் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் முறையாக மேற்கொள்ளாமையால் குறித்த சோளன் விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.