கடந்த 1996ஆம் ஆண்டு பிரதமராக பதவிவகித்த போது வழங்கப்பட்ட சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தில் அமைக்கப்படுகின்ற வீடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்களிடம் கையளிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு கஜிமா வத்தையில் எரிந்த வீடுகளுக்கு பதிலாக ரண்டிய உயன வீட்டுத் தொகுதியின் 294 வீடுகள் நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உணவு, எரிவாயு, எரிபொருட்களுக்காக வரிசையில் நின்று அவதிப்பட்ட மக்கள் இன்று சகஜமாக வாழ்கின்றனர். வரிசையில் நிற்கும் காலத்தில் கொழும்பு மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் கடைப்பிடித்த வரிக் கொள்கையால் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் அதை நீங்கள் தாங்கிக் கொண்டதால்தான், இன்று கடன் வாங்காமலும், பணம் அச்சடிக்காமலும் அரசின் வருவாயை அதிகரிக்க முடிந்தது. அதனால்தான் இந்த ஆண்டு முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்க முடிந்தது.
ரூபாயின் மதிப்பும் வலுவடைந்தது.
எதிர்காலத்தில் 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் மக்களுக்கு வழங்கப்படும். 1996-ம் ஆண்டு நான் பிரதமராக இருந்தபோது சீன அரசால் வழங்கப்பட்ட வீடுகளும் அடுத்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் கல்வி உரிமை, காணி உரிமை, வீட்டு உரிமை, வியாபாரம் செய்யும் உரிமை போன்றவற்றை மக்களுக்கு வழங்கி பொருளாதாரத்தை விரிவுபடுத்துவோம் என நான் நம்புகின்றேன்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.