மத்திய வங்கிக்குச் சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”எதிர்காலத்தின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும். தற்போது மத்திய வங்கிக்கு சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றன.
கடந்த காலங்களில் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜியமாக காணப்பட்டது. தற்போது வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் நாம் இறக்குமதி தடைகளை கட்டம் கட்டமாக நீக்கினோம்.
அதேபோல் தற்போது வாகன இறக்குமதிக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் உரிய முறைமையின் கீழ் நாம் தேவைக்க ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளோம்.
சுற்றுலாத்துறைக்கு தேவையான 750 வேன்களும் 250 பஸ்களும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். அரசாங்கம் நிதியமைச்சு ஆகியன ஆராய்ந்தே இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது”என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.