இந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட போராட்டத்தின் பின்னர் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் கோட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு முகாமில் தங்கியிருக்கும் இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில் பிறந்துள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்துள்ளது. இந்த உரிமை, தன்னுடன் முகாமில் தங்கியிருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அவர் விரும்புவதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன், இந்தியாவில் பிறந்த தனது இரண்டு பிள்ளைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவதற்காக தான் போராடிக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.