இலங்கைக்கு நிலையான கடன் நிலையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து கடன் வழங்கும் தரப்புகளுடன் கொள்கை ரீதியான
உடன்படிக்கையை எட்ட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் அமர்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இலங்கைக்கு நிலையான கடன் நிலையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து கடன் வழங்கும் தரப்புகளுடன் கொள்கை ரீதியான உடன்படிக்கையை எம்மால் எட்ட முடியுமென நம்புகின்றோம். உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக நாங்கள் பெயரிடப்பட்டுள்ளோம்.
ஆனால் சர்வதேச நாணயநிதியத்துடன் இணைந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் பின்னர், நாங்கள் படிப்படியாக வரி வருவாயை அதிகரித்துள்ளோம். தற்போது வரி செலுத்துவதில் இருந்து விலக்கும் நிலையை நாம் நீக்கியுள்ளோம்.
வரி இணக்கத்தை வலுப்படுத்தியுள்ளோம். 2023 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து அரசாங்கத்தின் வருமானம் 11 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது அரசாங்கத்தின் வருமானத்தில் 8.1 சதவீதம் ஆகும்.
2024 ஆம் ஆண்டுக்குள், இந்த சதவீதம் 12 ஆக இருக்கும் உயரும் என எதிர்பார்க்கிறோம். அந்த இலக்கை எங்களால் அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது, வரி இணக்கம் 130 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. வரி வருமானம் அதிகரித்துள்ளது.
இது நல்ல விடயமாக இருந்தாலும் திருப்தி அடைய முடியாது. வரி செலுத்தவேண்டிய வேண்டிய அனைவரும் வரி செலுத்தியே ஆகவேண்டும்” இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.