”தான் ஒருபோதும் திருடர்களுடன் கைகோர்க்கப்போவதில்லை” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, முல்கிரிகல, வீரகெட்டிய மீகஸ்ஆர மகா வித்தியாலயத்திற்கு, பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தற்போது நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற சதிகள் இடம்பெற்று வருகின்றதே தவிர நாட்டின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் துளியேனும் அக்கறை செலுத்தப்படுவதாகத் தெரியவில்லை.
தற்போதைய ஆட்சியாளர் திருடர்களுடனும் நெருங்கிய நண்பர்களுடனும், சக கூட்டாளி அரசியல்வாதிகளுடன் நட்புறவு வைத்திருக்கின்றார்.
ஆனால் நான் நாட்டின் 220 இலட்சம் மக்களுடன் நட்புறவு வைத்துள்ளேன். திருடர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி பதவியில் தானும் அமர்ந்தால் திருடர்களை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். நான் அவ்வாறு திருடர்களின் தயவில் பதவிகளை ஏற்காததால், திருடர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.
தங்கள் நெருங்கிய நண்பர்களை பாதுகாத்து வருவதே இன்றும் கூட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவராமைக்கான காரணமாகும்”இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.