மே தினக் கூட்டங்களை நடத்துவதற்கு பிரதான கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் ஏற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் நாளை 40 மேதின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதுடன் கொழும்பில் 14 பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சிகள் சில கொழும்பிலும் வெளி மாவட்டங்களிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு மருதானையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொள்வதற்கான விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேசமயம் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கொழும்பு நகர சபை மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு புறக்கோட்டையிலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு நகர சபை மைதானத்தையடைந்து அங்கு கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
அனைத்து பங்காளிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதுடள் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் தலைமையிலான கட்சிகளும் அணிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளன.
தேசிய மக்கள் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் அனுரகுமார திநாயக்கரின் தலைமையில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெறவுள்ளது. மே தின பேரணி பி ஆர் சி மைதானத்திலிருந்து ஆரம்பமாகி லிப்டன் சுற்றுவட்டத்தை சென்றடைந்து கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய மக்கள் சக்தி இம்முறை நாட்டின் நான்கு மாவட்டங்களில் தனித்தனி மே தின கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதுகொழும்பு யாழ்ப்பாணம் மாத்தறை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன தரப்பினரின் மே தினக் கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச துஷ்மந்த மித்ரபால ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளது. கிளிநொச்சியில் மாவட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் கூட்டம் நடைபெற உள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2:30 க்கு தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது
அத்துடன் மட்டக்களப்பு பெரிய கல்லாறு சித்தி விநாயகர் ஆலய வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் பிற்பகல் 2.30 க்கு மற்றுமொரு கூட்டம் இடம் பெறவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலையில் நடைபெறவுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் தலவாக்கலை நகரில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை திரட்டுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்கள் அங்கம் வகிக்கும் மேலவை இலங்கைக் கூட்டணி தயாசிறி தலைமையிலான மனிதநேயக் கூட்டணி, ரொஷான் ரணசிங்க தலைமையிலான நாட்டை கட்டியெப்புவதற்கான ஊழல் எதிர்ப்பு முன்னணி ஆகியவற்றின் ஒன்றிணைவில் முன்னெடுக்கப்படும் மே தினக் கூட்டம் கொழும்பு கிருலப்பனை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமத்துவக் கட்சியின் மே தினக் கூட்டம் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன்இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மே தினக் கூட்டம் முறக்கொட்டாஞ்சேனையில் நடைபெறவுள்ளது.
மேலும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் இருந்து பேரணி ஆரம்பமாகி சங்கிலியன் பூங்காவில் நிறைவடையவுள்ளதுடன் பிரதான கூட்டமும் நடைபெறவுள்ளது.