எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணையுமாறு ஜனாதிபதி கோரினாலும் எமக்கு இணையும் எண்ணம் இல்லை.
ஜனாதிபதி இந்த நாட்டை மாத்திரமல்ல கட்சியையும் வீணடித்தவர்.
ஜனாதிபதியுடன் எந்தவொரு இணக்கப்பாட்டினையும் ஏற்படுத்த நாம் விரும்பவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரதுங்க, மைத்ரிபால சிறிசேன போன்றவர்களிள் ஆட்சி அமைவதற்கு ரணில் விக்ரமசிங்கவும் ஒரு காரணியாக அமைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காவே தற்போது முயற்சிக்கின்றார்.
அவர் ராஜபக்ஷ தரப்பை பாதுகாப்பவராகவே செயற்படுகின்றார்.
அவ்வாறான ஒருவருடன் நாம் எந்தவித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்த விரும்பவில்லை” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்தார்.