பூமிக்கான ஊடகம் – சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்ளும் பத்திரிகை எனும் கருப்பொருளில் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ஊடக சுதந்திர தினம் 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியன்று கொலம்பிய பத்திரிகையாளர் கில்லர்மோ கானோ என்ற ஊடகவியலாளர் அவரது பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாக வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் கில்லர்மோ கானோவின் நினைவாக மே மாதம் 03 ஆம் திகதி சர்வதேச ஊடக சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஊடக சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாக்கவும், உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரத்திற்கான சூழலை மதிப்பீடு செய்யவும், ஊடகங்களின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களில் இருந்து ஊடகங்களைப் பாதுகாக்கவும் அரசாங்கங்களுக்கு இன்றைய நாள் நினைவூட்டப்படுகின்றது.
தங்களுக்கு ஏற்படும் உயிர் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல், உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள் மற்றும் கடினமான சூழ்நிலைகளைப் அறிக்கையாக சமர்ப்பித்து சமூகப் பொறுப்பை நிறைவேற்றுகின்றமை விசேட அம்சமாகும்.
அதேநேரம், எமது நாட்டின் ஊடக சுதந்திரமும் அண்மைய சில தசாப்தங்களாக பாதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அந்தவகையில், அரசாங்கம் அண்மையில் இணைய வழி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சில கட்டுப்பாடுகள் இந்த சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் இந்த சட்டம் பாரிய அளவில் விமர்சிக்கப்பட்டது, இந்த நிலையில், இலங்கையிலும் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக, ஒட்டுமொத்த சமூகமும் தன்னை அர்ப்பணிக்க வேண்டியது அவசியமாகும் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.