2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் ஆட்பதிவுத் திணைக்களம் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அலுவலகங்கள் நாளை காலை 8.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதி அட்டைகளில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பல பரீட்சை அனுமதி அட்டைகளில், பாடங்கள், மொழி மூலங்கள் உள்ளிட்டவை பிழையாக அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்பு கொண்டு வினவிய போது, தனியார் பரீட்சார்த்திகள் சிலரின் பரீட்சை அனுமதி அட்டைகளில் இவ்வாறான சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், இது பரீட்சையில் பாரிய தாக்கத்தைச் ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது.