இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையத்தில் செயற்கை கை கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் வெளிப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக் கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு 3 மே 2024 அன்று தொடங்கிய இந்த பயிலரங்கம் 23 மே 2024 அன்று முடிவடைகிறது.
375 இராணுவ வீரர்களுக்கும், கடற்படை விமானப்படை, மற்றும் பொரிஸ் திணைக்களத்தை சேர்ந்த 75 பேருக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
04 இராணுவ உறுப்பினர்களுக்கு செயற்கை கை கால்கள் அடையாளமாக வழங்கும் நிகழ்வு இங்கு இடம்பெற்றதுடன், இதன் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு.சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ராகம ரணவிரு செவன நிலையத்தின் தளபதி மற்றும் இராணுவ உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.