யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி இயங்கி வந்த கொல்களமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் பகுதியில் உரிய அனுமதிகளின்றி கொல்களம் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார பிரிவினருக்கு திங்கட்கிழமை இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கிருந்து இரு மாடுகளையும், மாடு வெட்ட பயன்படுத்தும் கூர்மையான ஆயுதங்களையும், மாடு கட்டும் கயிறுகளையும் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதன் உரிமையாளரை ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதியளித்துள்ளது.
அத்துடன் கொல்களத்தில் மாடுகள் கடத்தி வரப்பட்டு இறைச்சியாக்கப்பட்டதா? இறைச்சியாக்கப்பட்ட மாடுகள் திருடப்பட்ட மாடுகளா? பசு மாடுகளும் இறைச்சியாக்கப்பட்டுள்ளதா? போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி மன்றில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.