நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்கினாலும் தனது அரசியல் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய எனது நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் உலகம் முழுவதும் பேசுபொருளாக காணப்படுகின்றது. நான் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தே செயற்படுவேன்.
ஆனாலும் உயர்நீதிமன்றத்தினால் நேற்று எனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
ஏனெனில் நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பால் அரசியல் சதித்திட்டமும் காணப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு சிலரை தவிர பெறுமதி வாய்ந்த பலர் உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சிலரின் சதித்திட்டமும் உள்ளது.
நான் இந்த நாட்டு மக்களுக்காக குறிப்பாக பெண்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையை வெளிப்படையாக தெரிவித்து வந்த ஒருவர்.
நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டாலும் எனது அரசியல் பயணம் இத்துடன் முற்றுப்பெறாது.
இந்த நாட்டுமக்களுக்காக நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பேன்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் ஆதரவு வழங்குவேன்.
நாட்டில் வரிசையுகத்தை இல்லாமலாக்கி மக்கள் நிம்மதியாக வாழக்குகூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர்.
அவருக்கு எப்போதும் ஆதரவு வழங்குவேன்” என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.