ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும் சம்பவத்துடன் அரசாங்கத்திற்கும் தொடர்பு உள்ளதா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபோட இன்று சபையில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக பதிலளித்து உரையாற்றியபோதே இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இலட்சக்கணக்கான பணம் பெற்று இந்த மோசடியுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்தப் பிரச்சினை இலங்கையில் மாத்திரம் அன்றி பல நாடுகளிலும் உள்ளது.
இருப்பினும், வெளிவிவகார அமைச்சு இந்த பிரச்சினைகளில் தலையிட்டு, அவர்களை நாட்டிற்கு அழைத்துவர அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும்.
அத்தோடு, இந்த ஆட்கடத்தல் சம்பவத்தின் முக்கியமானவர்கள் யார், இது எவ்வாறு இடம்பெறுகிறது என்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள புலனாய்வுத்துறை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்” என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.