பிரித்தானியா, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதானது அதன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என, பிரித்தானிய கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் சிறந்த கல்விக்கு பெயர்போன பிரித்தானியா, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்யும் வகையில், பட்டதாரி விசா (graduate visa) வழங்கப்பட்டு வருகிறது.
அந்த விசாவை மதிப்பாய்வு செய்துள்ள பிரித்தானிய அரசாங்கம் அதன் முடிவுகளை இன்று வெளியிடவுள்ளது.
பட்டதாரி விசா தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே, இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி தெரிவித்துள்ளார்.
எனினும், அரசின் இந்த செயற்பாடுகள், தன் தலையில் தனக்குத் தானே மண்ணைவாரிப் போட்டுக்கொள்ளுவதற்கு சமம் என கல்வியாளர்கள் விமர்ச்சித்துள்ளனர்.
மேலும் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைகள், மாணவர்களையும், புதுமைகளையும் வரவேற்கும் பிரித்தானியாவின் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பிரித்தானியாவின் பொருளாதாரத்தையும் சமுதாயத்தையும் முன்னேற்றுவதற்கு, சர்வதேச மாணவர்களுக்கு கல்வியை வழங்கியமை உதவியாக அமைந்ததை மறுக்கமுடியாது எனவும் அவர்கள் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டில், பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு கணிசமாக குறைந்துள்ளமை Financial Times ஊடகத்தின் ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.