பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆரம்பப் பாடசாலைகள் உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஊடாக நன்மை பெறும் மாணவர்களின் தொகை 2024 ஆம் ஆண்டு 11 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக வழி வகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
இதற்கமைய ஒரு மாணவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 80 ரூபாயிலிருந்து 110 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்காக வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும் 4 பில்லியன் ரூபாய்க்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவிடம் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் பங்கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விருப்பத்துடன் உதவிகளை வழங்கினாலும், இந்த உதவிகளை நேரடியாக அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இல்லை என குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களுக்கு இவ்வாறான உதவிகளை நேரடியாக வழங்குவதில் ஏதாவது சட்டரீதியான தடைகள் உள்ளனவா என்பது பற்றி ஆராயுமாறும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க அறிவுறுத்தியுள்ளார்.