யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர்.
அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும், டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து கேள்வி எழுப்பிய போது சுகாதார பரிசோதகர்களுக்கும் அங்கு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக வெடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த ஊழியர்கள், சுகாதார பணியாளர்களை உற்பத்தி நிலையத்தினுள் வைத்து பூட்டி விட்டு,அங்கிருந்து சென்றுள்ளனர் எனவும், இது குறித்து சுகாதார பரிசோதகர்கள் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் சுகாதார பரிசோதகர்களை மீட்டுள்ளதோடு, குறித்த பணியாளர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.