நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்;தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த சட்டமூலங்களில் ஒன்று, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பாக முன்வைக்கப்படும் பொருளாதார பரிமாற்றம் சட்டமூலமாகும்.
இந்த சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படியே இந்த சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலை எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில், நாட்டின் அரச நிதி முகாமைத்துவம் மிகவும் உகந்த நிலையில் பேணப்பட வேண்டும்.
இது தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பாக கவனம் செலுத்தி, அரச நிதியை முறையான முகாமைத்துவம் செய்வதற்காக அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டு வேலைத்திட்டத்தில் இது தொடர்பில் எமக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
நாட்டின் எதிர்கால நிதி நிர்வாகத்தில் இது மிகவும் முக்கியமான சட்ட மூலம் என்பதையும் கூற வேண்டும்.
இந்த இரண்டு சட்ட மூலங்களும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இந்த இரண்டு சட்டமூலங்களிலும் பல தொழில்நுட்ப விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார போக்கை மாற்றாமல் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.