நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 13 மாவட்டங்களை சேர்ந்த 67,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருவதால் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி, இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதேபோன்று, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமேல் மாகாணத்திலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பலத்த மழையினால் 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, நுவரெலியாவின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருவதுடன், பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதால், அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, காலி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
கடும் மழை மற்றும் கடும் காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சார கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.