வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்காக 150க்கும் மேற்பட்ட கடற்படையினரை உள்ளடக்கிய 42 குழுக்கள் தயார்நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் திடீர் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பொதுமக்களை மீட்பதற்காக மூன்று விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
ரத்மலானை, கட்டுநாயக்க, ஹிங்குராக்கொட ஆகிய பகுதிகளில் குறித்த விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அவசர வெள்ளநிலைமையில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் படையினர் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் 34,880 பேர் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.