பொது வேட்பாளர் தொடர்பான கருத்து பரிமாற்ற இந்தக் கூட்டத்திற்கு தனக்கொரு அழைப்பும் வரவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் பொதுவேட்பாளர் குறித்து சுமந்திரன் எம்.பி ஏற்பாடு செய்துள்ள கருத்துப் பரிமாற்ற நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இந்த சந்திப்பு தொடர்பில் எனக்கும் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு நான் அழைக்கப்படவும் இல்லை. பத்திரிகைகள் ஊடாகவே இதனை நான் பார்த்தேன். அதேபோன்று வேறு யாரும் எனக்கு இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவும் இல்லை. இந்த நடவடிக்கை மிகவும் பிழையானது.
அவ்வாறான ஒரு கருத்துப் பரிமாற்றம் இருக்கக் கூடாது. தேசியத்தோடு இணைந்திருக்கும் எங்கள் சிவில் சமூகத்தினர் தமிழ் மக்கள் சார்பிலே ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவிற்கு வந்து விட்டார்கள்.
இதனை முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுடன் பல அரசியல் தரப்பினர்களுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறாக பொதுவான நிலைப்பாடு எடுக்கப்பட்டு அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் போது இந்த விவகாரத்தை பொது வெளியில் கொண்டு சென்று கருத்து பரிமாற்றம் எனக் கூறி முரண்பாட்டிற்குரியதாக கொண்டு வந்து நிறுத்துவது எங்களை திசை திருப்புவதாகவே அமையும். மேலும் பொது வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்தினால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவார்கள்.
ஆகவே எங்களுடைய சிவில் சமூகத்தினர் இது சம்மந்தமான நடவடிக்கைகளில் மிகக் கவனமாக இறங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.