அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிராம சேவகர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கிராம சேவகர்களின் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதன்போது கிராம சேவகர் சேவை யாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சம்பள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இங்கு கிராம சேவகர்களின் பதவி உயர்வு தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதால் அவற்றைத் தீர்க்கும் வகையில் குறித்த சேவைக்கான சட்டமூலம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென கிராம சேவகர்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சேவை சட்டமூலத்தில் சாதகமான முன்மொழிவுகள் உள்வாங்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதுள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்து பொதுவான உடன்பாட்டை எட்டுமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
அத்தோடு, 61 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பழமையான கிராம சேவை என்ற வகையில், அதற்குரிய சேவை சட்டமூலத்தின் அவசியத்தையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.