பப்புவா நியூ கினியாவில், நிலச்சரிவால் 2,000 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும், நோய் தொற்று பரவுவதற்கான அபாயமும் இருப்பதாக, ஐ.நா., அதிகாரி எச்சரித்துள்ளார்.
தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில், எங்கா மாகாணத்தில், கடந்த 24ஆம் திகதி கனமழை பெய்தது. இதனால், அந்த மாகாணத்தில் உள்ள மலை கிராமமான எம்பாலியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில், 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்பதால், எம்பாலி கிராமத்தில் மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட எம்பாலி கிராமத்தில், தரை மற்றும் இடிபாடுகளுக்கு இடையில் மழைநீர் தேங்கியுள்ளதுடன் இந்தப் பகுதியில் ஈரப்பதத்துடன் காணப்படும் குப்பை மற்றும் இடிபாடுகள் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளன.
இவை வேகமாக நகர்ந்தால், மற்ற கிராமங்கள் மீது விழும். இது, மற்றொரு நிலச்சரிவுக்கு வழிவகுக்கும். இதனால் முன்னெச்சரிக்கையாக, 8,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் ஐ.நா., அதிகாரி கூறியுள்ளார்
மேலும் எம்பாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில், இடிபாடுகளில் உடல்கள் சிக்கியுள்ள நிலையில், தண்ணீர் பாய்ந்து வருவதால், நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.