இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக, பஞ்சாபிலுள்ள பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானம் ஊடாக ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் தங்கியிருந்த வீடுகளில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நால்வரின் கையடக்கத் தொலைபேசிகளும் சோதனையிடப்பட்டுள்ளன. இதன்போது தொலைபேசி தரவுகளில் பாகிஸ்தானில் அபூ எனும் பயங்கரவாதியுடன் தொடர்பு பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐ.எஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமான நிலையத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைதுசெய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத் பயங்கரவாத தடுப்புபிரிவின் மூன்று குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.