”ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இனிவரும் காலங்களில் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டியது கட்டாயமாகும்” என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
ரஷ்ய உக்ரேன் மோதலில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையின் முன்னாள் படைவீரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் இச் சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ரஷ்யா சென்று பிரச்சனைகள் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.