கலவரம் தொடர்பான வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றில் இம்ரான்கானைப் பொலிஸார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் மே 9 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராவல்பிண்டியில் உள்ள இராணுவ தலைமையகம், அருங்காட்சியகம் என பல கட்டடங்கள் சேதமடைந்தன. இதேவேளை கலவரத்தில் ஈடுபட்டோரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் போராட்டத்தின்போது கலவரத்தை தூண்டியதாக இம்ரான்கான் மீதும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் “இம்ரான்கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை” எனத் தெரிவித்து குறித்த வழக்கில் இருந்து அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இம்ரான்கான், அடியாலா சிறைச்சாலையில் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.