இந்தியாவின் அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளதுடன், சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றிபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.
இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபை தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.
அருணாசல பிரதேசத்திலுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
எனினும், அங்கு ஏற்கனவே 10 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டமையால எஞ்சிய 50 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 47 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்று அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதேவேளை சிக்கிம் பகுதியிலுள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
சிக்கிம் பகுதியில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, பா.ஜ.க., சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.
அங்கு ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மைக்கு 17 தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இறுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதுடன், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி ஒரு தொகுதியை மாத்திரம் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் 31 தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சிக்கிம் பகுதியில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.