களனிவெளி புகையிரத மார்க்கத்தில் அவிசாவளை முதல் கொழும்பு வரை இடம்பெறும், அனைத்துப் புகையிரத சேவைகளும் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கொஸ்கம மற்றும் வக ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள பாலமொன்று சேதமடைந்துள்ளால் இவ்வாறு புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த புகையிரத மார்க்கத்தில் மொத்தமாக 3 புகையிரத சேவைகள் இன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன வெளியேறும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால், குறித்த வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பயணிக்கும் வாகனங்கள், தொடங்கொட வெளியேறும் பகுதி வரை மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து வரக்காபொல பிரதேசத்தில் இருந்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கொழும்பு – கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்
அதேபோன்று, மலையக பகுதிகளில் கடும் பனிமூட்டமான வானிலை நிலவுவதனால், வீதிகளில் சாரதிகள் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.