தமக்கு அழைப்பு விடுக்கப்படாமல் மத்திய செயற்குழு கூட்டம் நடத்துவது சட்டவிரோதமான செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றதுடன், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தரப்பினர் விசேட மத்திய குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, “மத்திய செயற்குழு கூட்டம் நடத்துவது சட்டவிரோதமான செயலாகும்.
பதில் தலைவர் பதில் செயலாளர் என வழங்கப்பட்டுள்ள நியமனங்களும் சட்டவிரோதமானவை.
மைத்ரிபால சிறிசேன தரப்பிலிருந்து எவரும் நீதிமன்றத்தில் இந்த விடயத்தை சவாலுக்குட்படுத்தவில்லை.
இன்றைய மத்திய செயற்குழு கூட்டம் சட்டவிரோதமானது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
மத்திய குழுகூட்டத்தில் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் திலங்க சுமதிபால கலந்துரையாடலில் பங்கேற்குமாறு எமக்கு அழைப்பு விடுத்துள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.