”தேர்தல்களைப் பிற்போடுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு அரசமைப்பின் ஊடாகச் செல்ல முடியும்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நான் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. அரசமைப்பில் இருக்கும் ஒரு சரத்து தொடர்பாகவே நான் கருத்து வெளியிட்டிருந்தேன்.
மக்கள் போராட்டத்திற்கு பின்னர், நாட்டை பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது செய்துவரும் வேலைத்திட்டங்களை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான மக்களின் மனங்களின் உள்ள நிலைப்பாட்டைத்தான் நான் கூறினேன்.
2027 ஆம் ஆண்டில் பாரிய கடன் தொகையை செலுத்த வேண்டிய நிலைமையில் நாம் உள்ளோம்.
கடன் தொகையை செலுத்திய பின்னர், அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக இன்னும் பாரியளவு கடனை பெற வேண்டியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டை நாம் முன்னேற்ற வேண்டும்.
அந்தக் காலத்தில்தான் நாம் தற்போது இருக்கிறோம். அரசமைப்புக்கு இணங்க, மக்களுக்கு வாழும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சிலர் நான் கூறிய கருத்திற்கு எதிர்ப்பினை வெளியிட முடியும்.
எனினும், நான் அனைவரிடமும் ஒன்றைக் கேட்டுக் கொள்கிறேன். தற்போது செயற்படும் இந்த வேலைத்திட்டங்களுக்கு ஓரணியாக இணைந்து ஒத்துழைக்க தயாரா? இதற்கு அனைவரும் இணங்கினால், இதற்காக மக்கள் ஆணையைக் கோருவது பிழையா என்று நான் கேட்கிறேன்.
இன்று நாட்டில் இடம்பெறும் இந்த வேலைத்திட்டங்கள் நிறுத்தப்படுமானால், நாடு மீண்டும் பின்னோக்கி பயணித்துவிடும். எனவே, இந்த வேலைத்திட்டத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்ற ஒரே நிலைப்பாட்டுடன் நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுப்போம்.
அப்படியில்லாமல், தங்களின் அதிகார ஆசைக்காக எவரேனும் ஒருவர்போட்டியிடுவாரானால், நாடு மீண்டும் பாதாளத்தில் விழுந்துவிடும். ஜனாதிபதி கொண்டுசெல்லும் இந்த வேலைத்திட்டம் இடையிலேயே நின்றுவிடுமோ என்ற அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் அவர்களது வேலைத்திட்டங்களை பொது வெளியில் தெரிவிக்குமாறு கூறியும், இதுவரை பதில் இல்லை.
ஆனால், இன்றுவரை அப்படி நடக்கவில்லை. இவர்கள் எனது கருத்துக்கும் எந்தவொரு எதிர்ப்பினையும் வெளியிடவில்லை. எனவே, அவர்கள் எனது கருத்துக்கு எதிர்ப்பில்லை என்பதே இதிலிருந்து தெரிகின்றது” இவ்வாறு பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.