இந்திய மக்களை தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகிவரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளுக்கு இணங்க பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
மேலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியாக் கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தமிழ் நாட்டின் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க.வின் வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை முதல், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பா.ஜ.க. தலையிமையான தேசிய ஜனநாயக கூட்டணி 239 இடங்களிலும், காங்ரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.
அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, 7 இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளார்.
இதேவேளை, தமிழகத்தில் 40 தொகுகளையும் கைப்பற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் நாட்டில் பா.ஜ.க. ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள்கூட இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இதனிடையே, ஆந்திராவில் அதிக வாக்குளை பெற்று முன்னிலையில் உள்ள, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்துள்ளார்.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளநிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவின், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதன்படி, ராகுல் காந்தி 647,445 வாக்குகளை பெற்றுள்ளார்.
மக்களவையிள்ள 543 ஆசனங்களுக்காக தேர்தல் நடைபெற்றநிலையில், 272 ஆசனங்களை கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணியே இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.