பிரபல திரைப்பட நடிகர் ரவீந்திர ரந்தெனிய 5 தசாப்தங்களாக இலங்கைத் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ”ரவீந்திரவை நான் முதன்முதலில் 1975 இல் வெளிவந்த கலுதிய தஹர திரைப்படத்தின் போது தான் கண்டேன்.
அதே வருடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நான் களனிக்கு வந்தேன்.
அங்கு தலுகமவில் இருந்து வந்திருந்த ரவீந்திரவின் குடும்பத்தை அறிந்து கொண்டேன்.
எங்கள் கட்சிக்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தனர்.
அதன்படி அவருடன் அரசியலில் ஈடுபட்டேன். மேலும், திறந்த பொருளாதாரத்தால், இந்த நாட்டில் திரைப்படத்துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. ரவீந்திர ரந்தெனிய அந்த நிலைமையுடன் மேல்நோக்கி வருவதைக் கண்டோம். அந்த காலகட்டத்தில் பல முக்கிய திரைப்படங்களில் நடித்தார்.
அதே சமயம் அரசியலிலும் இணைந்தார். எனது அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த அவர் இறுதியாக எனது வேண்டுகோளின் பேரில் 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது விருப்பம் அரசியலில் அன்றி கலைத் துறையில் இருந்தது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
1974 இல் திரையிடப்பட்ட தரங்கா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இணைந்த ரவீந்திர ரந்தெனிய என்ற நடிகர், சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் என்பதோடு தனக்குக் கிடைத்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து கடந்த 5 தசாப்தங்களாக இலங்கை சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் பல மறக்க முடியாத நினைவுகளை பதிக்கச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.