பிரதமர் தினேஷ் குணவர்தன, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியின் ஐரோப்பிய ஒன்றிய ஆய்வுக்குழுவுடன் நேற்று (7) அலரிமாளிகையில் கலந்துரையாடியுள்ளார்.
]இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடிய பிரதிநிதிகள், அரசாங்கம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
அடுத்த தேர்தல் தொடர்பில் வதந்திகள் பரவி வருவதாக அவர்கள் கூறியபோது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசியலமைப்பு விதிகள் மிகத் தெளிவாக இருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அரசியல் சாசனத்தின்படி தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் அனுப்பப்பட்டு தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், ஊடகப் பிரதிநிதிகள், உள்நாட்டு பார்வையாளர்கள் மற்றும் வாக்காளர்களைச் சந்திக்கவுள்ளதாக தூதுக்குழுவின் குழுத் தலைவர் மெட்டே பேக்கன் தெரிவித்தார்.
சட்டப் பணிப்பாளர் ஜயதிஸ்ஸ டி கோஸ்டா, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு முன்மொழியப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்களை விளக்கினார்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு தேர்தலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு ஒரு பூர்வாங்க அறிக்கையையும், இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் துணைத் தலைவர் லார்ஸ் பிரெடல் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச தேர்தல் கண்காணிப்பில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நம்பகமான அங்கமாக உள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல், 65 க்கும் மேற்பட்ட நாடுகளில் 180 க்கும் மேற்பட்ட தேர்தல் கண்காணிப்பு பணிகளை அனுப்பியுள்ளது.
பிரதிநிதிகள் குழுவில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் துணைத் தலைவர் லார்ஸ் பிரெடல், குழுத் தலைவர் மெட்டே பேக்கன், துறைத் தலைவர் காரி கஸ்மான், கொள்கை அதிகாரி லாரே பிலிப்-ககன் மற்றும் அரசியல் நிபுணர் இன்டா லேஸ் ஆகியோர் அடங்குவர்.
நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, உள்ளூராட்சி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, சட்டப் பணிப்பாளர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்டா, சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஊடகத்துறை ஆலோசகர் சுகீஸ்வர சேனாதிர மற்றும் சட்ட அதிகாரி கயானி பிரேமதிலக்க ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.